SMS படித்து செய்த அறுவை சிகிச்சை!!!!!! 12/09/2008

உங்களால் SMS படித்து என்ன என்ன செய்ய முடியும்?நல்ல நகைச்சுவையாக இருந்தால் சிரிக்கலாம். மன வருத்தம் மிக்க செய்தியாக இருந்தால் அழலாம். சமையல் கூட செய்யலாம் (ஹிஹி...எல்லாம் அனுபவம்தான்).

காங்கோ-வில் இருந்து கொண்டு லண்டன்-இல் இருந்து வந்த குறுஞ்செய்திகளை படித்து சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார் பிரிட்டன் மருத்துவர் ஒருவர்.

நாட் என்ற பிரிட்டன் மருத்துவர் தன்னார்வ தொண்டு புரிவதற்காக காங்கோ சென்றுள்ளார். அங்கு 16-வயது சிறுவன் ஒருவனை வலது கையில் பலத்த காயத்தோடு இவரிடம் கொண்டு வந்திருக்கிறார்கள். வெறும் 6-இன்ச் மட்டுமே கை தோளோடு ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது. நீர் யானை கடித்து காயம் ஏற்பட்டதாக அவரிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.ஆனாலும் உள்ளூர் கலகக்காரர்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் அவன் காயமடைந்ததாக பிற்பாடு அவருக்கு தெரிய வந்துள்ளது.

தோள்பட்டை தகட்டையும் கழுத்து எலும்பில் ஒன்றையும் எடுக்க வேண்டியது இருக்கும் என்று தெரிந்த அவருக்கு அந்த அறுவை சிகிச்சை செய்வதில் போதிய அனுபவம் இல்லை. இருப்பினும் அவரின் சக மருத்துவரோடு அறுவை சிகிச்சை அறையில் கூட இருந்த அனுபவம் சமயத்துக்கு கை கொடுத்துள்ளது.

அவரின் நண்பரான மேயரின் தாமஸ்-க்கு தன்னுடைய கைபேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி நிலைமையை விளக்கி செய்முறைகளை குறுஞ்செய்தியாக அனுப்புமாறு கூறி உள்ளார். பிறகு அதை பின்பற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து விட்டார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இது லண்டன்-இல் வருடத்திற்கு அதிகபட்சமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 10 முறை மட்டுமே செய்யப்படும் கடினமான அறுவை சிகிச்சையாம். இது செய்யப்படும்போது மிகவும் அதிகமான இரத்த இழப்பு ஏற்படும். அறுவை சிகிச்சைக்கு பின் மிக கவனமாக தீவிர கண்காணிப்பு பிரிவின் சகல வசதிகளோடு நோயாளியை பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் நுட்பமான அறுவை சிகிச்சையை அவரிடம் இருந்த வெறும் 568 cubic centimeter இரத்தத்தை கொண்டும் மிக அடிப்படையான மருத்துவ வசதியுடனும் நிகழ்த்தி இருக்கிறார் இந்த மருத்துவர்.

இதற்கு அவர் அளிக்கும் விளக்கம் இதோ: "நான் மிகவும் தீர ஆலோசித்துதான் இதை மேற்கொண்டேன். அந்தச் சிறுவனை ஒற்றைக் கையுடன் இந்த கலகத்துக்கு மத்தியில் இருக்க விட வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும் அவன் உயிரோடு இருப்பது பெரிதாகப்பட்டதால் இந்த முடிவை மேற்கொண்டேன். மருத்துவ வசதிகள் போதாத காரணத்தால் மிகவும் கவனமாக பக்கத்தில் இருந்து அவன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தேன்.இதில் என்னுடைய பங்கு ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. அந்த சமயத்தில் நான் அங்கே இருந்தது அவனுடைய அதிர்ஷ்டம். கடவுள் ஒரு உயிரைக் காப்பாற்ற எனக்களித்த ஒரு வாய்ப்பு. அவ்வளவே. அவனுடைய முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சி அளவிட முடியாதது.அதை சொல்ல வார்த்தைகள் இல்லை".

தீதும் நன்றும் பிறர் தர வாரா. அறிவியல் முன்னேற்றம் மனிதனுக்கு நிறைய கெடுதல்களையே தருகிறது என்பவர்களின் எண்ணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நெகிழ்வான தருணம் அல்லவா இந்த செய்தி?



0 comments:

Post a Comment