1090 - தீவிரவாதத் தடுப்புத்துறைக்கான அவசர அழைப்பு எண் அல்ல!!!!! 12/13/2008

"சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளையோ ஆட்களையோ பார்த்தால் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு 1090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடைய அடையாளமும் உங்களைப் பற்றிய விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.மீண்டும் இன்னொரு தாஜ் சம்பவம் நடைபெறாமல் தடுப்போம்",என்ற மின்னஞ்சல் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப்பின் பலரது மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருக்கக்கூடும். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் வந்தது. இது உங்களுக்கும் கூட வந்து இருக்கலாம்.

இந்த மின்னஞ்சலை உங்களது கணினியில் உள்ள குப்பைக்கூடைக்கு அனுப்புங்கள்.இது எல்லோரையும் தவறாக வழி நடத்திக் கொண்டு இருக்கிறது.ஆம்,இது ஒரு புரளியை கிளப்பிவிடும் மின்னஞ்சல் ஆகும்.

நடந்ததை நினைத்து அவனனவன் மனது வெம்பி கொதித்துக்கொண்டு இருக்க, வேண்டும் என்றே இந்த மாதிரி ஒரு போலியான,உதவும் நல்லவன் வேடத்தில் இந்த மின்னஞ்சல் உலவிக்கொண்டு இருக்கிறது.

மென்பொருள் நிபுணர்கள், மீடியா, வங்கிகள்,மனித வள மேம்பாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கும் இது பெருவாரியாக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் தன்னைப் போன்ற,மற்ற துறைகளில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி, நல்லெண்ணத்தில், எச்சரிக்கை செய்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எண்ணி உள்ளனர்.சில மென்பொருள் அலுவலகங்களில் இதை கவன ஈர்ப்புப் பலகையிலும் ஒட்டி வைத்து உள்ளார்கள்.இவ்வளவு தூரம் அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நம் எல்லோரையும் பாதித்து உள்ளது.ஆனால் இதை உருவாக்கி அனுப்பியவர் நல்ல எண்ணத்தில் அனுப்பவில்லை.வெறும் பொழுதுபோக்காக,விசமத்தனமாக அனுப்பி இருக்கிறார்.

ஏனெனில் 1090 என்பது மூத்த குடிமக்களுக்கான உதவி அழைப்பு எண்.இதற்கும் தீவிரவாத தடுப்புப்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தீவிரவாத தடுப்புப்பிரிவில் பணி செய்யாத இந்த நண்பர்களின் தலைவலி இந்த போலி மின்னஞ்சலால் வெகுவாக ஏறி விட்டிருக்கிறது.சாதாரண நாளில் 30 அழைப்புகளைப் பெறும் இவர்கள் தற்போது 100 அழைப்புகள் வரை, அதுவும் தீவிரவாதத்தை தடுப்பது எப்படி,எங்கெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் அழைப்புகளையே பெறுகின்றனராம்.கடந்த இரண்டு வாரங்களில், எண்ணிகையில் இது 100 அழைப்புகளையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் வழக்கமாக இந்த எண்ணுக்கு உதவி வேண்டி அழைக்கும் மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.எப்பொழுது அழைத்தாலும், தொடர்பு கிடைக்காத காரணத்தால் இவர்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

சைபர் குற்றத்தடுப்பு துறைத் தலைவரான அஜய் குமார் சிங் சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் இது தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்று கூறி உள்ளார்.பொதுவாக இது மாதிரி சமயங்களில் தங்களுக்கு வரும் புகார்களை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இது வரை அப்படி எதுவும் வராத காரணத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதே துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

இவர்கள் புகாருக்குக் காத்திருந்து நடவடிக்கை எடுக்கும் அவகாசத்தில், எத்தனையோ முதியவர்கள் பாதிக்கப்படலாம்.எனவே தயவு செய்து இனிமேல் யாரும் இந்த மின்னஞ்சலை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஏற்கனவே முதுமையில் தவிக்கும் ஒருவருக்கு சேர வேண்டிய உதவி நம்முடைய இந்த அறியாமையான செயலால் தடுக்கப்படலாம்.முகம் தெரியாத அவர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு இடையூறு உண்டாக்காமல் இருப்போமே.

பி.கு:உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மையை நீங்கள் www.snopes.காம் என்ற தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒட்டுப்பட்டையில் உங்களது ஓட்டை போட்டு பிறருக்கும் இதை தெரியப்படுத்தலாமே.....



0 comments:

Post a Comment