என்னைக் கவர்ந்தவர்கள்...!!!! 3/29/2009

அமிர்தவர்ஷிணி அம்மா எழுதிய தலைப்பு இது.சிதறல்கள் தீபாவும் இந்த தலைப்பில் நன்றாகவே எழுதி வருகிறார்.தலைப்பை கடன் வாங்கி எழுத தூண்டியது நான் சந்தித்த சில மனிதர்களே.இந்த பதிவை அவர்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எங்க ஊர் கோலப்பொடி தத்தா:

கரகாட்டக்காரனில் "குடகுமலை காற்றில் வரும்" பாடலில் வருவது போன்ற மாட்டு வண்டியில் தனது மனைவியுடன் கோலப்பொடி விற்க வருவார். "கோஓஓஓலப்பொடியேயேய்" என்று அவர் குரல் தெருவிலிருந்து 100 அடி தள்ளி உள்ளே இருக்கும் எங்கள் வீட்டுக்குள் துல்லியமாக கேட்கும். அப்படி ஒரு கணீர் குரல்.நான் பள்ளி செல்லும் வயதில் பார்க்கும்போதே அவரது ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பச்சை நிற துணியால் மூடப்பட்ட கண்களில் கண்ணாடி அணிந்துகொண்டு, தலை நரைத்து முதுமையை வெகு காலத்துக்கு முன்னமே சந்தித்து விட்டிருந்தார். ஆனால் அந்த வயதிலும் ஒரு நாள் தவறாமல் மாலை 4 மணிக்கு எங்கள் தெரு பக்கம் அவர் குரலை கேட்க முடியும்.தொழிலிலும் கறாரான பேர்வழி அவர் .அவருக்கு நிறைய சொத்து உண்டு என்று ஊரில் சொல்லுவர்.இருப்பினும் சோம்பி உட்காராமல் உழைத்த அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேசன்.கல்லூரி படிக்கும் காலத்திலும்கூட விடுமுறையில் ஊருக்கு வரும்போதும் அவரது குரலிலோ அவரது கம்பீரத்திலோ குறை ஏதும் இருக்கவில்லை.பணி நிமித்தமாக வெளியூர் வந்த பிறகு அவரை அவ்வப்போது கூட பார்க்கும் வாய்ப்பு இல்லை.இவ்வளவு கால இடைவெளியில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டிருக்கலாம்.அயராத உழைப்பு என்றதும் இன்றும் என் நினைவில் வருபவர் இவர்தான்.



 உங்கள் வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்ப நீங்கள் தயாரா? 3/24/2009

பெங்களூரில் பெட்ரோல் பங்கில் இன்று ஒரு அறிவிப்பை பார்த்தேன். வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்பிக்கொள்ள சொல்லி வெளியிடப்பட்டிருந்தது.எப்போதும் போனவுடன் பெட்ரோல் போட்டுவிட்டு அதே வேகத்தில் 2 ரூபாய் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பி கெளம்பி போய்க்கிட்டே இருப்போம்.இதில் இந்த நைட்ரஜன் வாயு வகையறா எப்படி விசேஷமானது?இதை அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டேன்.ரொம்ப நாட்கள் காற்று குறையாமல் சக்கரத்தில் தங்கி இருக்கும் என்றும் அவ்வளவு சீக்கிரம் பஞ்சரே ஆகாது என்றும் கூறினார்.நம்பும்படியாக இல்லை.உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன்.

மறந்து விட்டேனே...முதல் முறை காற்று நிரப்பும்போது ஓவ்வொரு சக்கரத்திற்கும் ஆகும் செலவு 30 ரூபாய்.அதன் பின் ஒவ்வொரு மறுநிரப்பலுக்கும் 10 ரூபாய்.நேப்ட்யுன் என்றொரு நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்திருந்தது.



 நண்டுக்கறியும் பின்னே ஞானும்...!!! 3/22/2009

தற்போது உள்ள குழுவை பிரித்து வேறு வேறு குழுக்களில் ஐக்கியப்படுத்துவதால் அலுவலகத்தில் "குழு மதிய உணவுக்கு"(டீம் லன்ச்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் சென்ற இடம் இந்திரா நகர் டொம்லூர்-ல் அருகில் பார்பெக்யு நேசன்.

இடம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. போன சிறிது நேரத்திலேயே ஸ்டார்டர் உணவுகளுடன் பந்தியை தொடங்கினோம். முதலில் ஒரு சிறிய அடுப்பு மாதிரி இருந்ததை கொண்டு வந்து வைத்தனர். பிறகு அதன் மீது கம்பியில் செருகிய காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை கொண்டுவந்து வைத்துவிட்டு இது 90 சதவிகிதம் ஏற்கனவே வேகவைத்து விட்டாயிற்று. அதன் மேல், பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சாஸ் வகைகளை தடவி மிச்ச 10 சதவிகிதத்தையும் நீங்களே கம்பியை திருப்பி திருப்பி விட்டு வேகவைத்து சாப்பிடுங்கள் என்றுவிட்டு சென்றார் பேரர்.


அட பாவிங்களா நாங்களே சமைத்து நாங்களே சாப்பிட உங்களுக்கு காசா என்று நினைத்துகொண்டே, கம்பியை திருப்பி திருப்பி புரட்டிபோட்டு சாப்பிட்டு முடித்தோம். கொண்டு வந்து வைக்கிறார்கள் வைக்கிறார்கள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்(அதே ரெண்டு ஐட்டங்கள்தான்). நம்ம மேலதான் எவ்வளவு அக்கறை என்று நினைத்தால், இங்கு ஆறேழு முறை வந்த எங்கள் பாஸ், இது அவர்களது வியாபார தந்திரம்.இந்த உணவு வகைகளியே வயிற்றை ரொப்பி விட்டால் மெயின் ஐட்டங்களுக்கு அவ்வளவாக நமது வயிற்றில் இடம் இருக்காது. மற்ற உணவு வகைகளை கம்மியாய் எடுத்துக்கொள்வோம். அது அவர்களுக்கு மிச்சமாகும். அதை இரவுக்கு உபயோகப்படுத்திகொள்வர் என்றார். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் எங்களை பேரர் கவனித்த "கவனிப்பு" என்னமோ யோசிக்கவேண்டியதாகவே இருந்தது.


இதில்
எங்கள் குழுவில் உள்ள ஜுனியர் பையன் ஒருவன் என்னமோ ரொம்ப சீரியஸாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். எல்லாரும் வாங்க மெயின் கோர்ஸ் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதுதான் தாமதம் என்னது இனிமே தனியா மெயின் கோர்சுன்னு ஒன்னு இருக்கா என்று அதிர்ச்சி அடைந்தான். அது வரைக்கும் அவன் உள்ள தள்ளுனதே அந்த கடைக்கு அன்று நஷ்ட கணக்குதான். அவ்வளவு உள்ளே தள்ளியாயிற்று. இதில் இனிதான் மெயின் கோர்ஸ் என்றதும் அடடா கொஞ்சம் கம்மியா சாப்பிட்டு இருக்கலாமே என்ற கவலை அவனுக்கு.

ஒரு வழியா அவங்க அவங்க தட்ட எடுத்துகிட்டு ஜெயில் கைதிங்க மாதிரி வரிசையில நின்னோம்.கிடைத்த வரை அள்ளி போட்டுக்கொண்டவர்களும், தட்டின் விளிம்பு வரையில் நிரப்பிகொண்டவர்களும், நாசூக்கு பார்த்து அளவாய் பரிமாரிக்கொண்டவர்கள் என ஒவ்வொருவரின் உணவுப்பழக்கமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சைவம் அசைவம் என இரண்டு பிரிவுகளில் உணவு வைக்கப்பட்டிருந்தாலும் சைவத்தின் பக்கம் கூட்டம் கொஞ்சம் குறைவுதான். நானும் என் பங்குக்கு சிறிது பிரியாணி, நண்டு வறுவல் என எடுத்து வந்தேன்.


இது வரைக்கும் சிக்கன் மட்டன் மீன் தவிர வேறு எதையும் சாப்பிட தோணியதில்லை. ஏதோ அந்த இனம் அழிந்து போகாமல் இருக்க நம்மால் ஆனது. தின்பதில் நோகாமல் தின்னப்பழகியதாலும் இருக்கலாம். நண்டு வறுவல் நான் ருசி பார்த்ததே இல்லை (இப்படி வரப்போ எல்லாம் ட்ரை பண்ணினால்தான் உண்டு...ஹிஹி). ஏதோ பந்தாவாக எடுத்து வந்து விட்டாலும் அதை சாப்பிடுவது எப்படி என்று வேறு தெரியவில்லை.

எனக்கு எதிரே உட்கார்ந்து இருந்த தோழி வெளுத்து கட்டினார்.எப்படி சாப்பிடுவது என்று கேட்டதற்கு தாராள மனதுடன் தனது ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி செய்முறை விளக்கம் கொடுத்தார். சொன்னபடியே நானும் திசைக்கொன்றாக கொடுக்கை பிளக்க முயற்சி செய்ததில் ஒரு பாதி அரை அடிக்கு எம்பி குதித்து தட்டிலும் மீதி பாதி தரையிலுமாக கிடந்தது. வடிவேலு கணக்கா இது உனக்கு தேவையா என்று என்னை நானே நொந்துகொண்டே மிச்ச உணவு வகைகளை ருசி பார்த்தேன். ருசி அப்படி ஒன்றும் ஆகா ஓகோவென இல்லையென்றாலும் சாப்பிடும் வகையில் இருந்தது.


அதன் பிறகு டெசர்ட் பகுதியில் ஆளாளுக்கு வேட்டையாடு விளையாடுதான். தட்டுகொள்ளா ஐஸ்கிரீம், குலாப்ஜாமூன், கேக் என்று தட்டை நிறைத்துக்கொண்டு வந்த நண்பரை பார்த்து போதுமா என்று கேட்டதற்கு இன்னைக்குன்னு பார்த்து எனக்கு ஒடம்பு சரி இல்லை(காதில் இஸ்திரி பெட்டியை சூட்டோடு வைத்து விட்டதால் அன்று விடுப்பு எடுத்து இருந்தவர் அவர். நாளை மதியம் டீம் லன்ச் என்று முந்தின நாள் கேள்விப்பட்டதும் அடித்துப்பிடித்து அன்று அலுவலகம் வந்தாயிற்று :)) அதான் கம்மியா சாப்பிடுகிறேன் என்று ரொம்ப பீல் பண்ணிட்டு போனார்.


2 மணிநேரத்துக்கு மேல் ஆகியும் யாரும் கிளம்ப தயாராய் இல்லை. இரை உண்ட மலைப்பாம்பை போல் நெளிந்துகொண்டு சோபாவில் சாய்திருந்தனர். கடைக்காரனும் கரண்டை விட்டு விட்டு அணைப்பது, வேறு என்ன வேண்டும் என கேட்பது என்று எப்படி எப்படியோ யோசித்து யோசித்து முயற்சி செய்தாலும் அசையாமல் உட்கார்ந்து கடுப்பேற்றிவிட்டு ஒரு வழியாய் புறப்பட்டு அலுவலகம் வந்து அடைந்தோம்.



 பெண்களின் வாழ்நாள் ஏன் அதிகமா இருக்குன்னா ... 3/20/2009

சில நகைச்சுவை துணுக்குகள். சிரித்து மகிழ மட்டுமே.சிந்திக்க அல்ல.
யாரையும் புண்படுத்தவும் அல்ல.

=======================================================

குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நபரை கைது செய்த காவலர், "எங்கே செல்கிறாய்?" என்று கேட்கிறார்.

வண்டி ஓட்டி வந்தவர்: "குடிப்பதால் வரும் கெடுதல்களை விளக்கும் லெக்சர்-ஐ கேட்க போகிறேன்".

காவலர்: இந்த பின்னிரவு வேளையில் யார் வகுப்பு எடுப்பார்?

வண்டி ஒட்டி வந்தவர்: வேறு யார்,என் மனைவிதான்.

=======================================================

நண்பர்: நீண்ட ஆயுளுக்கு ஏதேனும் வழி உள்ளதா?

மருத்துவர்: கல்யாணம் செய்து கொள்.

நண்பர்: ஓ..அது உதவக்கூடுமோ?

மருத்துவர்: இல்லை...ஆனால் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற எண்ணம் அதற்கு மேல் உண்டாக வாய்ப்பில்லை.

=======================================================

நண்பர் 1: பாகிஸ்தான் 5 விக்கெட்,8 ஓவரில் இன்னும் 1 ரன்னில் வெற்றியடையலாம் என்ற சூழ்நிலையில் அந்த அணியின் கேப்டனுக்கு எது மிக அழுத்தம் கொடுக்கக்கூடிய விஷயம்?

நண்பர் 2: யா அல்லா.....கோப்பை பெறும் விழாவில் எப்படி ஆங்கிலத்தில் உரையாடுவது?

=======================================================

நண்பர் 1: பெண்கள் மட்டும் எப்படி ஆண்களை விட மிக நீண்ட நாட்கள் உயிர் வாழ முடிகிறது?

நண்பர் 2: ஏன்னா ஷாப்பிங்கால் என்றுமே ஹார்ட் அட்டாக் வராது. அதற்கு ஆகும் பில் செலவை கட்டும்போதுதான் வரும்.

=======================================================

நண்பர் 1: முழுமை அடைவதற்கும் முடிந்ததுக்கும் என்ன வித்தியாசம்?

நண்பர் 2: நல்ல மனைவி கிடைத்தால் உனது வாழ்க்கை முழுமை அடைகிறது.இல்லையேல் உனது வாழ்க்கை முடிந்து விடுகிறது.

=======================================================

நிறைய வழிகள். விஷம்,தூக்க மாத்திரை,தூக்கு,பலமாடி கட்டடத்தில் இருந்து குதிப்பது,ரயில் முன்னால் பாய்வது என்று நிறைய வழிகள்.
ஆனால் நாம் கல்யாணத்தை தேர்வு செய்கிறோம்-மெதுவாகவும் நிச்சயமாகவுமானதாக.

=======================================================

நண்பர் 1: வெளியே சாப்பிடுவது,வீட்டை சுத்தப்படுத்துவது,துணி துவைப்பது,ஒழுங்கில்லாத துணிமணிகளை உடுத்துவது என்று வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பித்ததால் கல்யாணம் செய்து கொண்டேன்.

நண்பர் 2: அட என்ன ஆச்சரியம்.நான் கூட இப்போது சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காகதான் விவாகரத்து செய்தேன்.

=======================================================

மனைவி: சமையல் ஆளை நிறுத்தி விட்டு நான் இனிமேல் சமைத்தால் நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?

கணவன்:நான் எதுவும் தர வேண்டியது இல்லை.என்னுடைய ஆயுள் காப்பீடு உன்னை தன்னாலே வந்து சேரும்.

=======================================================



 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...!!! 3/14/2009

நண்பர்களே!!!! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....!!!




 போவோமா (பெங்களூர்) ஊர்கோலம்? 3/05/2009

பெங்களூரில் இருக்கும் இடம் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகும் வழித்தடம் மற்றும் அதன் தூரம் அறிய வேண்டுமானால் பின்வரும் தளத்தை உபயோகித்து கொள்ளலாம்.

வழித்தடம் கானொளியுடன் கிடைப்பது இன்னும் விசேடமானது.அதாவது செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை காணொளி மூலமே வழிநடத்தி செல்கின்றது இந்த தளம்.இதனால் சில முக்கியமான லேண்ட்மார்க்-ஐ தவறவிடாமல் நேரில் செல்லும்போது நினைவு வைத்துக்கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.

தளத்தின் முகவரி: www.vidteq.com

தற்போது பெங்களூருக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




 பின்(மண்டை) நவீனத்துவம்..!!!!! 3/02/2009

இனிமே தலை வழுக்கையா இருக்குன்னு யாரும் கவலைப்படாதீங்கப்பு.
உங்களுக்கு புடிச்சவங்கள டாட்டூ செஞ்சுகிட்டீங்கன்னா அது ஒரு குறையா தெரியாது.

வேணும்னா நமீதா(என்ன பண்றது தற்போதைய ட்ரெண்ட்படி சேர்க்க வேண்டியதாய் இருக்கிறது),ஏஞ்செலினா ஜோலி மாதிரி ஆளுங்களையும் டாட்டூ பண்ணிக்கோங்க.உங்க சொட்டை ரொம்ப அழகா இருக்குன்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்கல்ல...ஹிஹிஹி.

அதுக்கு எல்லாத்துக்கும் முன்னோடியா இங்க ஒருத்தர் எப்படி யோசிச்சு இருக்கார் பாருங்க.