முத்தான முத்தல்லவோ....!! - பாகம் 2 12/30/2008

இதன் முந்தைய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.

இனி அதன் தொடர்ச்சியை மேற்கொண்டு படிக்கலாம்.

செயற்கை சிப்பி வளர்த்து முத்து பெரும் முறை பெரும்பான்மையோரால் நம்பப்படுவது போல ஜப்பானியர்கள் கண்டுபிடித்தது அல்ல.வில்லியம் சவில்லி-கென்ட் எனப்படும் ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர் முதலில் இதை கண்டறிந்தவர்.அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த டோகிசி நிஷிகாவா,முறையான பண்ணை வளர்ப்பை அமல்படுத்த மிகிமொடோவின் உதவியை நாடினார்.பின்னாளில் அவர் பெண்ணையும் மணந்தார்.1916-ல் முறையான உரிமம் அவருக்கு தரப்பட்டது.அதை ஜப்பானியர்கள் வியாரபார ரீதியாக பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.எனவே இதன் முன்னோடி வில்லியமே ஆவார்.






உலகின் பிரசித்தி பெற்ற முத்து வெனிசுலா அதிபர் ரோமுலோ,ஜான் கென்னெடி-இன் வருகையின்போது அவர் மனைவி ஜாக்குலின் கென்னெடி-க்கு கொடுத்த நெக்லஸ் ஆகும்.




இந்து மதத்தில் கருட புராணத்தில் "ஒன்பது முத்துக்கள்" என்ற தலைப்பில் முத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.கிறித்துவ மதத்திலும்,"சொர்க்கத்தின் அரசாங்கம் உயர்ந்த மதிப்புடைய முத்தை போன்றது", என்று குறிப்பிடப்படுகிறது.இஸ்லாத்தில்,"சொர்க்கத்தில் வசிப்பவர் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பர்",என்று கூறப்பட்டுள்ளது.




 நீங்கள் 5 வருடங்களில் சராசரியாக எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்புவீர்கள்? 12/24/2008

நீங்கள் 5 வருடங்களில் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்புவீர்கள்?
இது என்ன மொக்கையான கேள்வி?சொந்தமா எழுதியது, ஊரான் inbox-ல் இருந்து எனக்கு வந்ததை forward தட்டுவது என எல்லாமே சேர்த்து ஒரு ம்ம்ம்ம்.....அதெல்லாம் கணக்கில் அடங்காததுப்பா என்பீர்கள் இல்லையா?(நாங்கெல்லாம் கணக்கில் சூரப்புலியாக்கும்...ஹிஹிஹி).

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பில் கிளிண்டன், ஜனாதிபதியாக தன்னுடைய பதவிக்காலத்தில் அனுப்பியது எவ்வளவு தெரியுமா?ஆயிரம்?லட்சம்?அதுதான் இல்லை.

ஜனாதிபதியாக அவர் அனுப்பியது இரண்டே மின்னஞ்சல்கள்தான்.ஒன்று,ஜான் கிளென் என்பவருக்கு-ஜான் space shuttle விமானத்தில் இருக்கும்போது.இன்னொன்று தனக்கான மின்னஞ்சல் சரியாய் வேலை செய்கிறதா என்று பார்க்க அனுப்பிய சோதனை மின்னஞ்சல்.




 ஒரே நேரத்தில் இரண்டு G-Mail கணக்கில் சவாரி செய்வது எப்படி? 12/24/2008

பல சமயங்களில் நம்முடைய ஒரு G-Mail கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு போக வேண்டி இருக்கும்.உதாரணத்துக்கு, நண்பர் ஒருவருடைய தொடர்பு எண் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நம்முடைய நண்பர்கள் குழுவிற்கு (eg.your collegemates' groups) உண்டான மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன செய்வோம்?இப்போது உள்ளே நுழைந்திருக்கும் கணக்கை விட்டு வெளியே வந்து மற்றொரு கணக்கிற்கு போக வேண்டியதுதான். ஆனால் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்த எண் அதற்குள் மறந்து போய் இருக்கும்.அல்லது புதிதாய் வந்த மின்னஞ்சல்களை படித்துவிட்டு, எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு,வெளியேறி விடுவோம்.மறுபடியும் நினைவு வரும்போது, சலித்துக்கொண்டு(பேஸிக்கா நாங்க கொஞ்சம் சோமாறி...சீ சோம்பேறி ;)),மீண்டும் அந்த கணக்கிற்கே போய் விவரத்தை எங்காவது குறித்து வைத்துக்கொண்டு வெளியே வந்து மற்றொரு தளத்திற்கு போய் அதை பதிவோம்(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...சோடா குடுங்களேன்யா).

ஆனால் Firefox-ன் CookiePie Add-on மூலம் இந்த முறை எளிதாக்கப்பட்டுள்ளது.உங்களுடைய கணக்கை விட்டு நீங்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது.இரண்டு G-Mail கணக்கையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.


அதாகப்பட்டது இது cookies எனப்படும் உங்கள் விவரங்களை வைத்திருக்கும் text file-ஐ தனித்தனியாக maintain செய்கிறது(நம்ம ஊரு அரசியல்வியாதி மாதிரியானு எல்லாம் கேக்கப்படாது ஆமா).இந்த cookies தான் அந்த தளத்துள் நீங்கள் ஏற்கனவே உள்ளே நுழைந்து இருக்கின்றீர்கள் என்பதை நினைவு வைத்திருக்கும்.எனவே மறுபடி அதே தளத்தினுள் நுழைய முற்படும்போது,"ஏற்கனவே நீ வேற ஒரு கணக்கில் நொழஞ்சு இருக்க நைனா. வேணும்னா இங்க இருந்து வெளிய போயா டுபுக்கு அப்பாலிக்கா வேற கணக்குக்கு உள்ள போவியாம்" என்று திட்டுவதும் இதன் வேலையே.

ஆக cookies-ஐ தனித்தனியாக இந்த Add-ஆன் maintain செய்வதால் இந்த அசௌகரியம் தவிர்க்கப்படுகிறது(எது அசௌகரியம்?உள்ள போக முடியாம அவதி படுறதா இல்ல திட்டு வாங்கறதான்னு கேட்டிங்கன்னா ஆட்டோதான் ஜாக்கிரதை! :-)) .

தரவிறக்கத்திற்கு இங்கே செல்லவும்.



 Forum-களுக்குள் நுழைய தற்காலிக மின்னஞ்சல் முகவரி வேண்டுமா? 12/24/2008

நாம் உலாவும் பல தளங்களில் நமது சொந்த மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டி இருக்கும்.உதாரணமாக,Forums.இணையதள மோசடிகள் பெருகிவிட்ட இந்நாளில் நமது தனிப்பட்ட விவரங்களை இப்படி போகும் வலைதளத்தில் எல்லாம் பதிவு செய்ய நமக்கு மனது வராது. அது அவ்வளவு பாதுகாப்பானதும் அல்ல அல்லவா?ஆனால் உள்ளே நுழையவே நமது மின்னஞ்சல் கேட்டு எரிச்சல்பட வைத்தாலும் நமக்கு அதனுள் போயே தீர வேண்டிய அவசியமோ கட்டாயமோ இருக்கலாம். இந்த சமயங்களில் நமது தனிப்பட்ட முகவரி கொடுப்பதற்கு பதிலாக வேறு வழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவரா நீங்கள்?பிடியுங்கள் தீர்வை.10 Minute E-Mail.

இந்த தளம் இலவச தற்காலிக மின்னஞ்சல் முகவரியினை உங்களுக்கு தருகிறது.அதன் ஆயுள் 10 நிமிடம் மட்டுமே.எனவே தான் அதற்கு பெயர் 10 நிமிட மின்னஞ்சல்.

அதனை உபயோகிக்கும் வழி பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம் .



பத்து நிமிடத்துக்குப்பிறகு மீண்டும் அடுத்த 10 நிமிடத்திற்கு புதுப்பித்துக்கொள்ளலாம்.



10 Minute Mail தளத்திற்கு போக இங்கே கிளிக்கவும்.



 முத்தான முத்தல்லவோ....!! - பாகம் 1 12/24/2008

சிப்பிக்குள் இருந்து வருவது முத்து என்பது நம் அனைவருக்கும் தெரியும்.முத்தானது அதன் இருப்பிடத்தில் இருந்து அணிகலனாக நம்மிடம் எப்படி வந்து சேர்கிறது என்று தெரியுமா?

அதற்கு முன் முத்தைப் பற்றி சில தகவல்கள் .

பொதுவாக முத்துக்கள் இருக்கும் உயிருள்ள சிப்பிகளின்(mollusk குடும்பைத்தை சேர்ந்த Oysters மற்றும் Mussels) இருப்பிடம் உப்பு நீர்(கடல்) மற்றும் நன்னீர்(ஏறி,ஆறு,குளம் போன்றவை).சில நேரம் சாப்பிடவோ மூச்சு விடவோ அதன் துவாரங்கள் திறந்து இருக்கும்போது இந்த வகையான வெளிப்புற இடைஞ்சல்கள் அதன் உடம்பினுள்ளே புகுந்து விடுவதுண்டு.தன்னை தாக்க வரும் ஒட்டுண்ணி மற்றும் தூசி போன்ற பொருட்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள அவைகளை சுற்றி பிசின் போன்ற பொருள் மூலம் அதை மூடி விடுகிறது.அதன் மீது கால்சியம் கார்பநேட் என்ற படிமனை அடுக்கடுக்காக படியும்போது அது முத்தாக உருவாகிறது.முத்துக்கள் அதன் உருவ அமைப்பை பொறுத்து எட்டு வகைகளாக பிரிக்கலாம்:round,வெள்ளை-round,button, drop, pear, oval, baroque மற்றும் circled.ஒரு முத்து எடுக்க பல ஆயிரம் சிப்பிகளை கொல்ல வேண்டி இருக்கலாம்.சரியாக சொல்ல வேண்டுமானால் 3 டன் சிப்பிகளில் 3 அல்லது 4 மட்டுமே முத்து உருவாக்கக்கூடிய வாய்ப்பு பெற்றிருக்கும்.

முத்துக்கள் வெள்ளை நிற சிப்பிகளிலேயே கிடைக்கின்றன. கிடைக்கும் முத்துக்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதில்லை.கறுப்பு,மஞ்சள்,பழுப்பு,பச்சை என்று பல வண்ணங்களில் கிடைக்கின்றன.கறுப்பு சிப்பிகள் 99%, முத்துக்களை உருவாக்குவதில்லை.வெள்ளை சிப்பிகள் வெகு அபூர்வமாக கறுப்பு முத்துக்களை உருவாக்குகின்றன.அதனால் கறுப்பு முத்துகளின் மதிப்பானது பல மடங்கு உயர்வானது(இனிமே யாரும் நாம கறுப்பா பிறந்துட்டமேன்னு வருத்தப்படாதீங்கப்பு).


முத்தின் பிரதிபலிக்கும் தன்மையை வைத்து அதன் மதிப்பு கணக்கிடப்படும்.அதிக பளபளப்பான,பிரதிபலிக்கும் தன்மையுடைய முத்துக்களின் விலை அதிகம்.X-ரே மூலம் தற்போது அவைகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.இயற்கையாக முத்துக்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டது இந்திய பெருங்கடல் பகுதியில்தான்.தற்பொழுது பஹ்ரைன் கடல் பகுதியில்தான் இயற்கையான முத்துக்கள் கிடைக்கிறது.கடலில் மூழ்கி முத்தெடுக்க உதவும் கப்பல்களை நிறைய தன்வசம் வைத்துள்ளது ஆஸ்திரேலியா.ஆஸ்திரேலியா நாட்டை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் இன்னும் அவர்களால் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

முத்துக்கள் இரண்டு வகை.இயற்கை மற்றும் செயற்கை(இமிடேசன் அல்ல,பண்ணையில் வைத்து,மனித முயற்சியால்,சிப்பிகளை வளர்த்துவது.இமிடேசன் வகையறாக்கள் இந்த முறை மூலம் உருவாக்கப்படுவதில்லை).சூழலும், விளையும் விதமும் இயற்கையாக இருந்தாலும் மனித முயற்சி நடுவே தேவைப்படுவதால் செயற்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டின் குறுக்கு வெட்டு படம்(Cross-Section diagram) கீழே.


இமிடேசன் வகை முத்துக்கள், சிப்பியின் சுவரை ஒட்டி உள்ளே இருக்கும் பிசுபிசுப்பான பொருள் அல்லது கோரல் எனப்படும் பவளப்பாறைகள் அல்லது Conch(வலம்புரி,இடம்புரி சங்குகள் உருவாவது இதில் இருந்தே!) எனப்படும் உயிரினங்களில் இருந்தும் பெறப்படும் மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.கண்ணாடியின் மீது மீன் செதில்களால் ஆன திரவத்தை பூசியும் மற்றொரு வகை தயாரிக்கப்படுகிறது.




ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன்னார் வளைகுடா,சிகப்பு கடல்,பெர்சியன் வளைகுடா போன்றவற்றை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலில் இருந்தே பெரும்பாலான முத்துக்கள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.மூழ்கி முத்தெடுப்பதில் சீனர்கள் வல்லவர்களாக இருந்திருக்கின்றனர்.ஸ்பானிஷ் மக்களும் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். பிறகு ஜப்பானியர்கள் அதில் நீண்ட காலமாக முன்னனியில் இருந்தனர்.ஆனால் தற்காலத்தில் சீனர்களே முந்தியுள்ளனர்.ஜப்பான் அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்து பதப்படுத்தி பளபளப்பாக்கி ஜப்பான் லேபல் ஒட்டி அமோகமாக விற்று வருகின்றனர்.






மீதி அடுத்த பதிவில்..........



 GMail-ஐ விட்டு வெளியே வராமல், விரும்பும் வலைபக்கங்களுக்குள் உலவுவது எப்படி?-(Firefox) 12/23/2008

GMail-ஐ விட்டு வெளியே வராமல், விரும்பும் வலைபக்கங்களுக்குள் உலாவ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா?அதைத்தான் செய்கிறது இந்த Integrated GMail எனப்படும் Firefox Add-on.உங்களுக்கு விருப்பமான கூகிள் gadgets அல்லது பிற gadgets-களை வகைப்படுத்தி ஒருமுறை அதில் ஏற்றிவிட்டால் போதும்.நீங்கள் உங்கள் GMail அக்கௌன்ட்-ன் உள்ளே நுழையும்போது எல்லாம் மறுபடி வெளியே வர வேண்டிய தேவை இன்றிஉங்களுக்கு பிடித்தமான Google Calendar,Map,Picasa,Group,Reader மற்றும் பிற விருப்பமான வலைப்பக்கங்கள்,gadgets ஆகியவைகளை பதிந்து வைத்து இருப்பின் GMail-க்குள்ளேயே உலவும் வசதியை இந்த Add-on தருகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே போகவும்.

1)Tools->Integrated GMail செல்லவும்.பின்னர் அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும்.மாதிரி கீழே.

2)பின்னர் கீழே உள்ளது போல காட்சி அளிக்கும்.


தற்போது சோதனை தரவிறக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது.எனவே அங்கங்கு கொஞ்சம் bugs உள்ளது.இருப்பினும் பயன்படுத்தும்போது நன்றாகவே இருக்கிறது.

பி.கு:இந்த Addon-ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்த Mozilla Firefox வலைதளத்தில்-ல் நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்.இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தரவிறக்கம் செய்யும்போது பதிவு செய்து கொள்ளலாம்.



 குட்டி ஷகிரா...! 12/23/2008

நடனப்புயல் ஷகிரா-வின் அடுத்த வாரிசு போல இவங்க..என்னமா ஆடறாங்க பாருங்க...




 அனுபவம் புதுமை...!!! 12/20/2008

சமீபத்தில்(இது டோண்டு சாரின் சமீஈஈஈஈபம் அல்ல ...போன மாசம்தான்) திருச்சி மலைக்கோட்டைக்கு சென்றிருந்தேன்.உச்சிப்பிள்ளையார் சன்னதிமுன் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெற்றோர்களுடன் 2 குழந்தைகள்(ஒரு பையன்,அவனை விட இளைய பெண் குழந்தை ஒன்று) என்னைக் கடந்து சென்றனர்.தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர்களும் எனக்குப் பின்னால் நின்று நகரின் அழகை ரசிக்க ஆரம்பித்தனர். அந்த பையன் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்.அவர் அப்பாவும் சலிக்காமல் அவன் சொல்வதை காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தார்.

பையன் கேட்டான்,"அப்பா,அந்த கோயிலுக்கும் போகலாமா?"
அப்பா:"எந்த கோவிலுக்கு?"
பையன்:(ஸ்ரீரங்கத்தை நோக்கி கை காட்டியபடி)"அதோ அந்த ஊருல இருக்கிற கோயிலுக்கு.அது என்ன ஊருப்பா?"
அப்பா:"ஸ்ரீரங்கம்"
பையன்:"அதுதான் ஸ்ரீரங்கமா?"
அப்பா:"ஆமாம்."
பையன்:(திருவானைக்காவல் கோயிலை நோக்கி)"அங்க இருக்குதே அந்த ஊரு?"
அப்பா:(யோசிக்க அவகாசமே எடுக்காமல்)"ஸ்ரீலங்கா".
பையன்:(ஒரு நிமிடம் விழித்தவன் சுதாரித்துக்கொண்டு)"போப்பா நீ பொய் சொல்ற. பொய்தான சொல்ற?ஸ்ரீலங்கா இங்கிருந்து ரொம்ப்ப்ப்ப தூரம்"
உடனே அந்த பெண் குழந்தை தன்னுடைய அழகான மையிட்ட பெரிய கண்களை விரித்துக்கொண்டு,"நெசமாவாப்பா?அதுதான் ஸ்ரீலங்காவா?" என்று கேட்டாள்.

அவர்களின் வெகுளித்தனத்தையும் அவர்கள் அப்பாவின் timing humor-ம் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.



 Corrupt ஆன file-இல் இருக்கும் text-ஐ MS-Word மூலம் recover செய்வது எப்படி? 12/20/2008

முக்கியமான

விவரங்கள் அடங்கிய ஒரு text document corrupt ஆகிவிட்டால் அதை மீண்டும் recover செய்ய முடியுமா?முடியும். நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான கோப்புகளில் இருந்து MS-Word-ஆல் text-ஐ பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக Excel spreadsheet-ல் இருந்தோ, Word document-ல் இருந்தோ, அல்லது வேறு Office suite மூலம் எழுதப்பட்ட கோப்புகளிலோ இருக்கும் text-ஐ கூட ஒரு error popup-உடன் recover செய்ய முடியும்.

இவ்வளவு ஏன் ஒரு .exe file-ல் இருக்கும் text-ஐ கூட recover செய்ய முடியும்.

சரி Word மூலம் எப்படி text-ஐ recover செய்வது என்று பார்ப்போமா?

1.Main menu-வில் File->Open செல்லவும்(நீங்கள் Word 2007 பயன்படுத்துபவராக இருப்பின் இடது மேல்மூலையில் Office என்னும் பட்டன்-ஐ கிளிக் செய்த பின் Open Menu-வை கிளிக் செய்ய வேண்டும்).


2.பிறகு Files of type என்று கொடுக்கப்பட்டிருக்கும் drop-down box-இல் "Recover Text from any file" செலக்ட் செய்யுங்கள்.


3.உங்களுக்கு தேவையான கோப்பை(.doc,.xls,.exe,.rtf,etc என எது வேண்டுமானாலும்) தேர்ந்தெடுத்து Open-ஐ கிளிக் செய்யவும்.

இதற்கு பின்னர் ஒரு error popup வரும். படம் கீழே.

அதை கண்டுகொள்ளாமல் Close button-ஐ கிளிக் செய்யுங்கள். அந்த கோப்பில் இருந்த text இனி உங்கள் முன்னால்!!




 மின்னஞ்சலை டாக்குமென்ட்-ஆக மாற்றுவது எப்படி? 12/18/2008

நிறைய ஒப்பந்தங்கள் முதலில் மினனஞ்சல் மூலமாக ஆரம்பிக்கின்றது.பெரும்பாலான அலுவலகங்களில் வர்த்தக ரீதியான மின்னஞ்சல்களை அவர்களுடைய தனிப்பட்ட சேமிப்பு கிடங்கில்(மெயில் சர்வர் அல்லது ClearCase போன்ற டூல்ஸ்) சேமித்து வைத்திருப்போம். பிற்பாடு வாடிக்கையாளருடன் ஏதேனும் மாற்றுக்கருத்து உருவாகும்போது,"இல்லை அன்று நீ இப்படித்தான் சொன்னாய்,இன்று உனது தேவை(requirements) மாறி இருக்கிறது" என்று சொல்ல இது பயன்படும்.இதனால் தேவை இல்லாத கால விரயமும், வீணாக செலவழிக்கப்படும் மனித சக்தியும் தவிர்க்கப்படுகிறது.

இனி அந்த மாதிரியான முக்கியமான மின்னஞ்சல்களை காப்பி செய்து MS-Word-ல் பேஸ்ட் செய்து அதை சேமிப்பு கிடங்கில் கிடத்தி வைக்க வேண்டாம். ஜிமெயில் அக்கௌன்ட் இல்லாதவர் கிடையாது என்ற அளவிற்கு எல்லோரும் இன்று ஜிமெயில் மினனஞ்சல் id வைத்திருக்கிறோம். எனவே தனிப்பட்ட விசயங்களை மட்டுமல்லாது அலுவலக விசயங்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கின்றோம்.

வழக்கம்போலவே கூகிள் தன்னுடைய மினனஞ்சல் சேவைக்கு புது வசதி தந்துள்ளது.அதாவது,மின்னஞ்சலை டாக்குமென்ட்-ஆக சேமிக்கும் வசதி.

இதை செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு:
1.உங்களுடை ஜிமெயில் அக்கௌன்டிற்கு செல்லுங்கள்.
2.அதில் செட்டிங்க்ஸ் டாப் போங்கள்.


3.பிறகு ஜிமெயில் லாப்ஸ் மீது கிளிக் செய்யுங்கள்.


4."Create a document" என்ற வசதிக்கு பக்கத்தில் உள்ள enable-ஐ கிளிக்செய்யவும்.


இனி உங்களுடைய மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் எந்த சிரமமும் இன்றி டாக்குமென்ட் அமைப்பில் கிடைக்கும்.




 1090 - தீவிரவாதத் தடுப்புத்துறைக்கான அவசர அழைப்பு எண் அல்ல!!!!! 12/13/2008

"சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளையோ ஆட்களையோ பார்த்தால் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு 1090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடைய அடையாளமும் உங்களைப் பற்றிய விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.மீண்டும் இன்னொரு தாஜ் சம்பவம் நடைபெறாமல் தடுப்போம்",என்ற மின்னஞ்சல் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப்பின் பலரது மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருக்கக்கூடும். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் வந்தது. இது உங்களுக்கும் கூட வந்து இருக்கலாம்.

இந்த மின்னஞ்சலை உங்களது கணினியில் உள்ள குப்பைக்கூடைக்கு அனுப்புங்கள்.இது எல்லோரையும் தவறாக வழி நடத்திக் கொண்டு இருக்கிறது.ஆம்,இது ஒரு புரளியை கிளப்பிவிடும் மின்னஞ்சல் ஆகும்.

நடந்ததை நினைத்து அவனனவன் மனது வெம்பி கொதித்துக்கொண்டு இருக்க, வேண்டும் என்றே இந்த மாதிரி ஒரு போலியான,உதவும் நல்லவன் வேடத்தில் இந்த மின்னஞ்சல் உலவிக்கொண்டு இருக்கிறது.

மென்பொருள் நிபுணர்கள், மீடியா, வங்கிகள்,மனித வள மேம்பாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கும் இது பெருவாரியாக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் தன்னைப் போன்ற,மற்ற துறைகளில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி, நல்லெண்ணத்தில், எச்சரிக்கை செய்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எண்ணி உள்ளனர்.சில மென்பொருள் அலுவலகங்களில் இதை கவன ஈர்ப்புப் பலகையிலும் ஒட்டி வைத்து உள்ளார்கள்.இவ்வளவு தூரம் அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நம் எல்லோரையும் பாதித்து உள்ளது.ஆனால் இதை உருவாக்கி அனுப்பியவர் நல்ல எண்ணத்தில் அனுப்பவில்லை.வெறும் பொழுதுபோக்காக,விசமத்தனமாக அனுப்பி இருக்கிறார்.

ஏனெனில் 1090 என்பது மூத்த குடிமக்களுக்கான உதவி அழைப்பு எண்.இதற்கும் தீவிரவாத தடுப்புப்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தீவிரவாத தடுப்புப்பிரிவில் பணி செய்யாத இந்த நண்பர்களின் தலைவலி இந்த போலி மின்னஞ்சலால் வெகுவாக ஏறி விட்டிருக்கிறது.சாதாரண நாளில் 30 அழைப்புகளைப் பெறும் இவர்கள் தற்போது 100 அழைப்புகள் வரை, அதுவும் தீவிரவாதத்தை தடுப்பது எப்படி,எங்கெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் அழைப்புகளையே பெறுகின்றனராம்.கடந்த இரண்டு வாரங்களில், எண்ணிகையில் இது 100 அழைப்புகளையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் வழக்கமாக இந்த எண்ணுக்கு உதவி வேண்டி அழைக்கும் மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.எப்பொழுது அழைத்தாலும், தொடர்பு கிடைக்காத காரணத்தால் இவர்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

சைபர் குற்றத்தடுப்பு துறைத் தலைவரான அஜய் குமார் சிங் சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் இது தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்று கூறி உள்ளார்.பொதுவாக இது மாதிரி சமயங்களில் தங்களுக்கு வரும் புகார்களை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இது வரை அப்படி எதுவும் வராத காரணத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதே துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

இவர்கள் புகாருக்குக் காத்திருந்து நடவடிக்கை எடுக்கும் அவகாசத்தில், எத்தனையோ முதியவர்கள் பாதிக்கப்படலாம்.எனவே தயவு செய்து இனிமேல் யாரும் இந்த மின்னஞ்சலை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஏற்கனவே முதுமையில் தவிக்கும் ஒருவருக்கு சேர வேண்டிய உதவி நம்முடைய இந்த அறியாமையான செயலால் தடுக்கப்படலாம்.முகம் தெரியாத அவர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு இடையூறு உண்டாக்காமல் இருப்போமே.

பி.கு:உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மையை நீங்கள் www.snopes.காம் என்ற தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒட்டுப்பட்டையில் உங்களது ஓட்டை போட்டு பிறருக்கும் இதை தெரியப்படுத்தலாமே.....



 ஆஹாஅவனா-நீயி 12/13/2008

நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.....அவன் என்னோட பேச்ச கேக்கற மாதிரியே தெரியல...எவ்வளவு நேரம்தான் ஒரு மனுசன் காச புடி காச புடின்னு சொல்ல முடியும் சொல்லுங்க.....ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்னால முடியல கண்ண கட்டுது........குடுக்கற காச வேணாம்னு சொல்ற முட்டாள் நீயாதான் இருப்படா -னு திட்டிப் பாத்துட்டேன்....எவ்வளவோ பேரு டீ,காபி,முட்ட பப்ஸ் ,ஓசி சாப்பாடு,ஓசி சட்டை, டிரீட்-ங்கற பேருல பர்ஸ்-ஐ பதம் பாத்து பழுக்க வச்சி இருக்காங்க...நீ என்னடான்னா நானே தரேன்னு சொல்றேன் வேணாம்கிறியே...பரவா இல்ல நீ வாய்ல போட்டுக்கோ நான் ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டேனு சொன்னேன்....கொஞ்சம் கூட அசஞ்சு குடுக்க மாட்டேன்னுட்டான்.....என்ன உனக்கு அவ்வளவு பிடிவாதம்?பெரியவங்க எப்பவுமே விட்டு குடுக்கணும்னு சொல்லி இருக்காங்க நான் இவ்வளவு தூரம் கேக்கறதுக்காகவாவது கொஞ்சம் சரின்னு ஒத்துகிட்டா என்னனு அட்வைஸ் பண்ணியும் பாத்தேன்....ம்ம்ம்ம்ம் வாய தெறக்க மாட்டேனுபுட்டானே பாசக்கார பயபுள்ள......இது ஒன்னியும் ஆவற மாதிரி தெரியல.....என்னோட செல்லம்ல சொன்னா நல்ல புள்ளையா கேப்பியாம் அப்படினு கொஞ்சி பாத்தேன்....எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பாத்துட்டு போனாங்க.....சரி இது சரிபடாதுன்னு நமக்குள்ள இருக்குற கைப்புள்ள கண்ணு முழிச்சான்.....சொன்னா கேளு....(வயிறு)வலிக்குது.....அழுதுருவேன்......ப்ளீஸ் அப்படினு கெஞ்சி பாத்தான்....கடசில தான,தண்ட,சாம,பேத அஸ்திரங்களைப் பிரயோகிச்சும் அவன் திருந்தல....எவ்வளவு தூரம் சொன்னாலும் தன்மானத்தோட, பணத்த வாங்கிக்க மாட்றியே...நீ ரொம்ப நல்லவன்பா-னு சொல்லிட்டு வந்துட்டேன் அப்படின்னு நீங்க நெனைக்க கூடாது.....பின்ன என்னங்க எவ்வளவுதான் மனுசனோட பொறுமைய சோதிப்பாய்ங்க?நானும் எவ்வளவு நேரம்தான் வயிறு வலிக்காத நல்லவ மாதிரியே நடிக்கிறது?அவனோட வாய பாத்து நங்குன்னு ஒரு குத்து விட்டுட்டு வந்து கைல பிளாஸ்திரி போட்டதுதான் மிச்சம்.....வாய் எப்படி இருக்குனு பாக்க ஆசையா?ஹ்ம்ம்....தெரியுமே.இப்படி சந்தோசப்படறதுக்குன்னே கொலவெறியோட திரிவிங்களே....உங்களுக்காக படம் புடிச்சாந்தேன்.....அவனோட வாய கீழ இருக்கற படத்துல பாருங்க.....
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`

`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
சரியா தெரியலையா???சரி அடுத்த படத்த பாருங்க.....
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`

`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
அந்த எதிரியோட முழு படத்தையும் கீழ பாருங்க......
`
`
`

`
`
அந்த எதிரி,எங்க அலுவலகத்தில இருக்கற pantry கார்.
உங்களுக்கே இப்படி இருந்தா பசியில கண்ணு கட்டிக்கிட்டு வரும்போது இத நம்பி ஏதாவது சாப்டலாம்னு போயி மண்ட காஞ்ச எனக்கு எப்படி இருந்து இருக்கும்???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
வேற ஒண்ணும் இல்லைங்க ....நேத்து அப்பரைசல் மீட்டிங் வழக்கம்போல எல்லா மீட்டிங் மாதிரியும் லேட்-ஆ ஆரம்பிச்சாய்ங்க.வறுத்து தாளிச்சு முடிய நேரம் ஆகிடுச்சு....அவிங்க நம்மகிட்ட காய்ச்சின கஞ்சிய குடிச்சு முடிச்சு கிர்றடிச்சு வெளிய வந்தா முடிக்க வேண்டிய வேலைகள் வேற நெனப்பு வந்துச்சு...சரி ஏதாவது சிறு தீனி சாப்டுட்டு வேலைய தொடரலாமேன்னு போய் இதுகிட்ட காச திணிச்சு எதையாவது சாப்புடலாம்னு போனால் மிஷின்-ல ஏதோ பிரச்சினை.....காச வாங்க மாட்டேனு இம்சை பண்ணுது......வேற என்ன பண்ண முடியும்?கண்ணால மட்டும் பாத்து பசி ஆறிகிட்டு பசியிலயே வேலைய செஞ்சுட்டு வீட்டுக்கு போனேன்....மேல் பத்தில கண்ண கட்டுதுன்னு ஏன் சொன்னேன்னு இப்ப தெரியுதா :(

ஏய் யப்பா?என்ன கொலைவெறி வருது உங்களுக்கு?நாலு சாத்து சாத்தனும்னு இருந்தா கீழ இருக்கிற ஓட்டு பட்டை மேல ஒரேயொரு ஓட்டு குத்திட்டு போறது?



 SMS படித்து செய்த அறுவை சிகிச்சை!!!!!! 12/09/2008

உங்களால் SMS படித்து என்ன என்ன செய்ய முடியும்?நல்ல நகைச்சுவையாக இருந்தால் சிரிக்கலாம். மன வருத்தம் மிக்க செய்தியாக இருந்தால் அழலாம். சமையல் கூட செய்யலாம் (ஹிஹி...எல்லாம் அனுபவம்தான்).

காங்கோ-வில் இருந்து கொண்டு லண்டன்-இல் இருந்து வந்த குறுஞ்செய்திகளை படித்து சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார் பிரிட்டன் மருத்துவர் ஒருவர்.

நாட் என்ற பிரிட்டன் மருத்துவர் தன்னார்வ தொண்டு புரிவதற்காக காங்கோ சென்றுள்ளார். அங்கு 16-வயது சிறுவன் ஒருவனை வலது கையில் பலத்த காயத்தோடு இவரிடம் கொண்டு வந்திருக்கிறார்கள். வெறும் 6-இன்ச் மட்டுமே கை தோளோடு ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது. நீர் யானை கடித்து காயம் ஏற்பட்டதாக அவரிடம் சொல்லப்பட்டு இருக்கிறது.ஆனாலும் உள்ளூர் கலகக்காரர்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் அவன் காயமடைந்ததாக பிற்பாடு அவருக்கு தெரிய வந்துள்ளது.

தோள்பட்டை தகட்டையும் கழுத்து எலும்பில் ஒன்றையும் எடுக்க வேண்டியது இருக்கும் என்று தெரிந்த அவருக்கு அந்த அறுவை சிகிச்சை செய்வதில் போதிய அனுபவம் இல்லை. இருப்பினும் அவரின் சக மருத்துவரோடு அறுவை சிகிச்சை அறையில் கூட இருந்த அனுபவம் சமயத்துக்கு கை கொடுத்துள்ளது.

அவரின் நண்பரான மேயரின் தாமஸ்-க்கு தன்னுடைய கைபேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி நிலைமையை விளக்கி செய்முறைகளை குறுஞ்செய்தியாக அனுப்புமாறு கூறி உள்ளார். பிறகு அதை பின்பற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து விட்டார்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இது லண்டன்-இல் வருடத்திற்கு அதிகபட்சமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 10 முறை மட்டுமே செய்யப்படும் கடினமான அறுவை சிகிச்சையாம். இது செய்யப்படும்போது மிகவும் அதிகமான இரத்த இழப்பு ஏற்படும். அறுவை சிகிச்சைக்கு பின் மிக கவனமாக தீவிர கண்காணிப்பு பிரிவின் சகல வசதிகளோடு நோயாளியை பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் நுட்பமான அறுவை சிகிச்சையை அவரிடம் இருந்த வெறும் 568 cubic centimeter இரத்தத்தை கொண்டும் மிக அடிப்படையான மருத்துவ வசதியுடனும் நிகழ்த்தி இருக்கிறார் இந்த மருத்துவர்.

இதற்கு அவர் அளிக்கும் விளக்கம் இதோ: "நான் மிகவும் தீர ஆலோசித்துதான் இதை மேற்கொண்டேன். அந்தச் சிறுவனை ஒற்றைக் கையுடன் இந்த கலகத்துக்கு மத்தியில் இருக்க விட வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும் அவன் உயிரோடு இருப்பது பெரிதாகப்பட்டதால் இந்த முடிவை மேற்கொண்டேன். மருத்துவ வசதிகள் போதாத காரணத்தால் மிகவும் கவனமாக பக்கத்தில் இருந்து அவன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தேன்.இதில் என்னுடைய பங்கு ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. அந்த சமயத்தில் நான் அங்கே இருந்தது அவனுடைய அதிர்ஷ்டம். கடவுள் ஒரு உயிரைக் காப்பாற்ற எனக்களித்த ஒரு வாய்ப்பு. அவ்வளவே. அவனுடைய முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சி அளவிட முடியாதது.அதை சொல்ல வார்த்தைகள் இல்லை".

தீதும் நன்றும் பிறர் தர வாரா. அறிவியல் முன்னேற்றம் மனிதனுக்கு நிறைய கெடுதல்களையே தருகிறது என்பவர்களின் எண்ணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நெகிழ்வான தருணம் அல்லவா இந்த செய்தி?