வலைப்பூவில் குரல் இடுகை!! 2/18/2009

நல்ல சங்கதி உள்ளது ஆனால் பக்கம் பக்கமாக அதை தட்டச்சு செய்வதில் எரிச்சல் அடைபவரா நீங்கள்?உங்களுக்காகவே புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.

வலைப்பூ இடுகை என்பது பிறருடன் கருத்து பரிமாற்றம் செய்ய பயன்படும் முக்கியமான சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பரிச்சயமானது எழுத்து வடிவில் உள்ள வலைப்பூக்கள்.இதன் அடுத்த கட்டமாக வந்துள்ளது பேச்சு வடிவில் உள்ள குரல் வலைபூக்கள்(கவனிக்க:குரல்வளை இல்லை குரல் வலை :) வேறு ஏதாவது சரியான பதம் இருந்தால் தெரியப்படுத்துங்களேன்).

நாம் இடுகையாக இட வேண்டியதை பேசி இடுகை இடலாம்.இணையத்திலும் இது பேச்சு வடிவிலேயே சேமிக்கப்படுகிறது.

இந்த வகையிலான இடுகைகளை உடைய நமது வலைபக்கத்திற்கு வரும் பார்வையாளர்களிடம் voice-enabled கணினியும் speakers-ம் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஒலி கோப்பை நமது வலைப்பூவில் வெளியிடலாம்.

இது வியாபார ரீதியாக எவ்வளவு பயனளிக்கும் என்பதை இப்போதைக்கு அளவிட முடியவில்லை என்று அம்டக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீரங் பாபட் தெரிவித்துள்ளார்.

Ibibo என்ற இணையதளம் தற்போது தனது சேவையில் இதை பயன்படுத்தி வருகிறது.இதற்கு மிகவும் வரவேற்ப்பு உள்ளதாக நிறுவனர் அஷிஷ் கஷ்யப் கூறியுள்ளார்.

இவ்வளவு நல்லதும் நமக்கு சும்மா தருவாய்ங்களா?

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு உங்களது இடுகையை பேச்சு வடிவில் பதிவு செய்து விட வேண்டும்.அங்கிருந்து உடனே உங்களது இடுகைக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.இதில் என்ன பிரச்சினை என்கின்றீர்களா?அழைக்க வேண்டிய எண் புது தில்லியிலோ சிங்கப்பூரிலோ இருந்தால் அழைப்பிற்கு ஆகும் செலவு நமக்கே.

நம்மிடம் உள்ள சாதாரண ஒலி பதிப்பானில் பதிவு செய்து அதை இணையத்தில் ஏற்றுவது என்பது கையை கடிக்காத முறை.இதை விட என்ன வகையான மேம்பட்ட வசதிகளை இந்த குரல் இடுகை மூலம் Ibibo போன்ற தளங்கள் தருகின்றன என்பதை இந்த வசதியை பயன்படுத்தாத எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

குரல் வலைப்பூக்கள் வந்து விட்டன.அடுத்து வீடியோ வலைப்பூக்கள்-ன் காலமாக இருக்குமோ?



0 comments:

Post a Comment