நண்டுக்கறியும் பின்னே ஞானும்...!!! | 3/22/2009 |
|
தற்போது உள்ள குழுவை பிரித்து வேறு வேறு குழுக்களில் ஐக்கியப்படுத்துவதால் அலுவலகத்தில் "குழு மதிய உணவுக்கு"(டீம் லன்ச்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் சென்ற இடம் இந்திரா நகர் டொம்லூர்-ல் அருகில் பார்பெக்யு நேசன்.
இடம் என்னவோ நன்றாகத்தான் இருந்தது. போன சிறிது நேரத்திலேயே ஸ்டார்டர் உணவுகளுடன் பந்தியை தொடங்கினோம். முதலில் ஒரு சிறிய அடுப்பு மாதிரி இருந்ததை கொண்டு வந்து வைத்தனர். பிறகு அதன் மீது கம்பியில் செருகிய காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை கொண்டுவந்து வைத்துவிட்டு இது 90 சதவிகிதம் ஏற்கனவே வேகவைத்து விட்டாயிற்று. அதன் மேல், பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சாஸ் வகைகளை தடவி மிச்ச 10 சதவிகிதத்தையும் நீங்களே கம்பியை திருப்பி திருப்பி விட்டு வேகவைத்து சாப்பிடுங்கள் என்றுவிட்டு சென்றார் பேரர்.
அட பாவிங்களா நாங்களே சமைத்து நாங்களே சாப்பிட உங்களுக்கு காசா என்று நினைத்துகொண்டே, கம்பியை திருப்பி திருப்பி புரட்டிபோட்டு சாப்பிட்டு முடித்தோம். கொண்டு வந்து வைக்கிறார்கள் வைக்கிறார்கள் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்(அதே ரெண்டு ஐட்டங்கள்தான்). நம்ம மேலதான் எவ்வளவு அக்கறை என்று நினைத்தால், இங்கு ஆறேழு முறை வந்த எங்கள் பாஸ், இது அவர்களது வியாபார தந்திரம்.இந்த உணவு வகைகளியே வயிற்றை ரொப்பி விட்டால் மெயின் ஐட்டங்களுக்கு அவ்வளவாக நமது வயிற்றில் இடம் இருக்காது. மற்ற உணவு வகைகளை கம்மியாய் எடுத்துக்கொள்வோம். அது அவர்களுக்கு மிச்சமாகும். அதை இரவுக்கு உபயோகப்படுத்திகொள்வர் என்றார். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் எங்களை பேரர் கவனித்த "கவனிப்பு" என்னமோ யோசிக்கவேண்டியதாகவே இருந்தது.
இதில் எங்கள் குழுவில் உள்ள ஜுனியர் பையன் ஒருவன் என்னமோ ரொம்ப சீரியஸாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். எல்லாரும் வாங்க மெயின் கோர்ஸ் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதுதான் தாமதம் என்னது இனிமே தனியா மெயின் கோர்சுன்னு ஒன்னு இருக்கா என்று அதிர்ச்சி அடைந்தான். அது வரைக்கும் அவன் உள்ள தள்ளுனதே அந்த கடைக்கு அன்று நஷ்ட கணக்குதான். அவ்வளவு உள்ளே தள்ளியாயிற்று. இதில் இனிதான் மெயின் கோர்ஸ் என்றதும் அடடா கொஞ்சம் கம்மியா சாப்பிட்டு இருக்கலாமே என்ற கவலை அவனுக்கு.
ஒரு வழியா அவங்க அவங்க தட்ட எடுத்துகிட்டு ஜெயில் கைதிங்க மாதிரி வரிசையில நின்னோம்.கிடைத்த வரை அள்ளி போட்டுக்கொண்டவர்களும், தட்டின் விளிம்பு வரையில் நிரப்பிகொண்டவர்களும், நாசூக்கு பார்த்து அளவாய் பரிமாரிக்கொண்டவர்கள் என ஒவ்வொருவரின் உணவுப்பழக்கமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சைவம் அசைவம் என இரண்டு பிரிவுகளில் உணவு வைக்கப்பட்டிருந்தாலும் சைவத்தின் பக்கம் கூட்டம் கொஞ்சம் குறைவுதான். நானும் என் பங்குக்கு சிறிது பிரியாணி, நண்டு வறுவல் என எடுத்து வந்தேன்.
இது வரைக்கும் சிக்கன் மட்டன் மீன் தவிர வேறு எதையும் சாப்பிட தோணியதில்லை. ஏதோ அந்த இனம் அழிந்து போகாமல் இருக்க நம்மால் ஆனது. தின்பதில் நோகாமல் தின்னப்பழகியதாலும் இருக்கலாம். நண்டு வறுவல் நான் ருசி பார்த்ததே இல்லை (இப்படி வரப்போ எல்லாம் ட்ரை பண்ணினால்தான் உண்டு...ஹிஹி). ஏதோ பந்தாவாக எடுத்து வந்து விட்டாலும் அதை சாப்பிடுவது எப்படி என்று வேறு தெரியவில்லை.
எனக்கு எதிரே உட்கார்ந்து இருந்த தோழி வெளுத்து கட்டினார்.எப்படி சாப்பிடுவது என்று கேட்டதற்கு தாராள மனதுடன் தனது ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி செய்முறை விளக்கம் கொடுத்தார். சொன்னபடியே நானும் திசைக்கொன்றாக கொடுக்கை பிளக்க முயற்சி செய்ததில் ஒரு பாதி அரை அடிக்கு எம்பி குதித்து தட்டிலும் மீதி பாதி தரையிலுமாக கிடந்தது. வடிவேலு கணக்கா இது உனக்கு தேவையா என்று என்னை நானே நொந்துகொண்டே மிச்ச உணவு வகைகளை ருசி பார்த்தேன். ருசி அப்படி ஒன்றும் ஆகா ஓகோவென இல்லையென்றாலும் சாப்பிடும் வகையில் இருந்தது.
அதன் பிறகு டெசர்ட் பகுதியில் ஆளாளுக்கு வேட்டையாடு விளையாடுதான். தட்டுகொள்ளா ஐஸ்கிரீம், குலாப்ஜாமூன், கேக் என்று தட்டை நிறைத்துக்கொண்டு வந்த நண்பரை பார்த்து போதுமா என்று கேட்டதற்கு இன்னைக்குன்னு பார்த்து எனக்கு ஒடம்பு சரி இல்லை(காதில் இஸ்திரி பெட்டியை சூட்டோடு வைத்து விட்டதால் அன்று விடுப்பு எடுத்து இருந்தவர் அவர். நாளை மதியம் டீம் லன்ச் என்று முந்தின நாள் கேள்விப்பட்டதும் அடித்துப்பிடித்து அன்று அலுவலகம் வந்தாயிற்று :)) அதான் கம்மியா சாப்பிடுகிறேன் என்று ரொம்ப பீல் பண்ணிட்டு போனார்.
2 மணிநேரத்துக்கு மேல் ஆகியும் யாரும் கிளம்ப தயாராய் இல்லை. இரை உண்ட மலைப்பாம்பை போல் நெளிந்துகொண்டு சோபாவில் சாய்திருந்தனர். கடைக்காரனும் கரண்டை விட்டு விட்டு அணைப்பது, வேறு என்ன வேண்டும் என கேட்பது என்று எப்படி எப்படியோ யோசித்து யோசித்து முயற்சி செய்தாலும் அசையாமல் உட்கார்ந்து கடுப்பேற்றிவிட்டு ஒரு வழியாய் புறப்பட்டு அலுவலகம் வந்து அடைந்தோம்.
© 2009 பட்டாம்பூச்சி
0 comments:
Post a Comment